roy-maxim

உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ நம்மிடம் இல்லை. கிட்டத்தட்ட 3000 மைல்கள் இந்தியாவுக்கு குறுக்காக ஒரு வேலி, பராமரிப்பிற்காக 12000 பணியாளர்கள். அத்தனை விலைமதிப்பற்ற பொருளா உப்பு? இவற்றுக்கெல்லாம் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் விடை தெரிந்து கொள்ளலாம்.

உப்பு
சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைய உப்பின் தேவை 20 கிராம். இது ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, அத்தியாவசியப்பொருள். எனவே எல்லோரும் வாங்கியாகவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுமே உப்பினை உற்பத்தி செய்யக்கூடியவை அல்ல. கடற்கரையே இல்லாத பல மாகாணங்கள் இருக்கின்றன. அதுவே ஆங்கிலேயர்களின் உப்பின் மீதான வரி வசூலிக்கும் திட்டத்தின் ஆரம்ப கால‌ காரணங்களில் ஒன்று. 1800 களில் ஒரு மனிதன் தன்னுடைய நான்கு மாத சம்பளத்தை உப்பிற்காகவே செலவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அதாவது இன்று 10000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் 40000 ரூபாய் உப்பிற்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். எத்தனை கொடுமையாக இருந்திருக்கிறது?

பல்வேறு மாகணங்களும் பல்வேறு ஆங்கிலேய ஆளுநர்களால் ஆளப்பட்டமையால் ஒரு மாகாணத்திலிருந்து மற்றோர் மாகாணத்திறு உப்பின் விலை வேறுபட்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தங்களுடைய உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்பினை விற்பதற்காகவும், கடத்தலைத் தடுப்பதற்காகவும் ஆங்காங்கே சுங்கவேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன‌. பின்னர் வந்த ஆண்டுகளில் அவையெல்லாம் இணைக்கப்பட்டு ஓர் ஒட்டுமொத்த வேலியாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதில் முக்கியாமன ஓர் தகவல் அது ஓர் உயிர் வேலி. வெறும் கம்புகளைக் கொண்டு அமைக்கப்படும் வேலிகள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து விடுவதாலும், பராமரிப்புச் செலவு அதிகமாக இருந்ததாலும் அவற்றை உயிர் வேலிகளாக மாற்ற முடிவு செய்து முள்வேலி மரங்களை நட்டு அவற்றை உயிருள்ள முள்கொடிகளால் இணைத்துக் கட்டி உருவாக்கியுள்ளனர். அவ்வேலி முழுமை பெற்ற போது அதன் உயரம் 12 அடியாகவும், அகலம் 10 அடியாகவும் இருந்திருக்கிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட வேலிக்கு ஆண்டு பராமரிப்பு செலவு கிட்டத்தட்ட 16 லட்சம் ரூபாயாக இருந்திருக்கிறது. ஆனால் வருமானமோ 4 கோடியாக இருந்திருக்கிறது. இவ்வேலியின் பயனாக மற்ற பொருள்கள் மீதும் சுங்கம் விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கோதுமை,சர்க்கரை,நெல். இதனால் பெருமளவு உணவுப்பொருள்கள் நகர்வது தடுக்கப்பட்டு அது பின்னாளில் வங்கப்பஞ்சத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் மரணம் அடைவதற்கு ஓர் முக்கிய காரணமாக ஆகியிருக்கின்றது.

பிக்காலகட்டத்தில் அனைத்து மாகணங்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டமை, வரிகளுக்கான வேறு வழிகளை ஆங்கிலேயர்கள் கண்டுகொண்டமை போன்றவைகளால் இவ்வேலி 1890 களில் கைவிடப்பட தொடங்கி பின்னர் முற்றிலுமாக அழிந்து போனது. இன்றும் உப்பினை பல கிராமத்து சொல‌வடைகளில் காணலாம். அதன் பின்னணி அத்தனை கொடுமையானது. பின்னர் வந்த சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இவ்வரலாறு முற்றிலும் மறந்து போனது. காந்தி உப்பு சத்தியா கிரகம் நடத்தியபோது 1800 களின் ஆரம்பத்தில் இருந்தது போல அத்துனை கொடுமையான காலகட்டமாக இருக்கவில்லை. அதனால் அதுவும் மிகப்பெரும் தாக்கத்தையும்,வரலாற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் முடியவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

இப்புத்தகத்தினைப் பற்றி ஆசான் எழுதியுள்ள ஓர் அருமையான கட்டுரை இங்கே.