Month: August 2013

மருந்து உலகம் – மாய உலகம்

ayurvedaஇன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு.

குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான‌ மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்ப‌து இல்லாது போனது. 

இவையெல்லாம்தான் நவீன இந்தியா.

இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும் ஆயிரக்கணக்கில். ஏன்?
Continue reading

பண‌ம் அச்சடிப்பதை நிறுத்தினால் என்ன?

இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன?

inr_currency2அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான்.

என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம் குறைவதால் மக்களிடம் அதிக பணம் புழங்காது. ஆனால் பொருள்களின் உற்பத்தி, மனித வளம் போன்றவை அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் குறைவான பணம். அதிக பொருள் சந்தையில் நிலவும். பொருள்களின் விலை குறையும். அதோடு குறைவான பணமே புழக்கத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு குறையும். யாரும் வேலைக்கு ஆள் எடுக்க மாட்டார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

ஆக பணப்புழக்கத்தை உற்பத்திக்கு ஏற்ப அதிகரிப்பதே சிறப்பு.

அதிக பணம் அச்சடித்தால் என்ன?

inr_currencyபொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு.

இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி.

அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம் சேர்ந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். அரசு திடீரென்று பணத்தை அச்சடித்திருக்கிறது. ஆனால உற்பத்தி எப்போதும்போல்தான் இருக்கிறது.

 சரி பணத்தை புழக்கத்தில் விட்டாயிற்று. அடுத்தென்ன நடக்கும்? ஒட்டு மொத்த மக்களிடம் முன்பு 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அரசு ஒரு 50000 ரூபாய் அச்சடிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் விட்டபின் மக்களிடம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் இருக்கும்.

மக்கள் முன்பு 50 ஆயிரம் ரூபாய் இருந்தபோது வாங்க முயற்சித்த பொருள்களை இப்போது 1 லட்சம் ரூபாயைக்கொண்டு வாங்க முயற்சிப்பர். பொருள்களின் விலை தானாக உயரும். ஏனென்றால் பொருள்களின் உற்பத்தி திடீரென்று உயரவில்லை. ஆக‌ முன்பு 50 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இப்பொழுது 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். 

இப்படியாக‌ பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிடும். முன்னைய 50 ரூபாயின் மதிப்பை இப்பழுதுள்ள 100 ரூபாயால் தான் அடைய முடியும். 

மேலும் நாம் இறக்குமதி செய்த பொருளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் மேற்கூறிய தகவல்தான், 50 ரூபாய் கொடுக்க வேண்டிய ஒருவருக்கு இனி 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் முந்தைய 50 ரூபாயின் மதிப்பும், இப்போதைய 100 ரூபாயின் மதிப்பும் சமம்.

அதனால்தான் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதிக்கு இலாபமெனவும், இறக்குமதிக்கு நட்டமெனவும் கூறுகின்றனர்.

நாம் சுரண்டப்படுகிறோம்

சமீபத்தில் இந்த காணொளியை இணையத்தில் காண நேரிட்டது. அதிலிருந்து மீண்டும் நாம் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நவீன சித்தாந்தங்களின் வழியே சுரண்டப்படுகிறோம் என்ற எண்ணம் மேலும் வலுப்படுகிறது. காணொளி இங்கே.

தமிழ் மலாய் சொல் அரங்கம்

மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல்.tamil-maly

மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள் இயன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து விளக்கியிருக்கிறார்.

தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர்களுக்கு இந்நூல் அக்காதலை மென்மேலும் அதிகரிக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.

நூலின் நோக்கமும், தமிழ் மலாய் வார்த்தைகளும் மட்டும் போதுமென்றால் முன்னுரையையும், கடைசி மூன்று பக்கங்களையும் படித்தால் போதும். ஆனால் இந்நூலின் சிறப்பே  மலாய் மொழியில் உள்ள தமிழ்வார்த்தைகளைக் குறிப்பிடும்பொழுது அந்த தமிழ் வார்த்தை தமிழ் இலக்கியங்களில், நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு கலந்திருக்கிறது என்பதையும் விளக்கியிருப்பதே.

மேலும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் அவ்வார்த்தை தொடர்பான ஒரு வரலாற்று நிகழ்வினையோ, இலக்கிய நிகழ்வினையோ கூறியிருப்பது நூலின் நோக்கத்தோடு பொருந்துவதாக இல்லாமல் போனாலும், படிப்போர் நெஞ்சில் தொய்வு ஏற்படாவண்ணம் சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகிறது.

ஆக மொத்தத்தில்

 மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணங்கச்செய்தல் வேண்டும்”

என்ற பாரதியின் வரிக்கான செயல் வடிவத்தின் முயற்சி இது.

ஜெயமோகன் அவர்களிடமிருந்து

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு.

நான் செப்பனிடப்படுகிறேன்.

அன்புள்ள மகிழ்நன்

உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல.

உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம் ஆகியவற்றின் அர்த்தம் எனக்குப்புரியவில்லை. அது குறைந்தபட்ச தர்க்கத்துடன் இருக்கிறதா என்றுகூட நீங்கள் கவனிப்பதில்லை. நீங்கள் சொல்லவரும் விஷயத்தை பதிவுசெய்வதற்கு முன் இணையதளக்கட்டுரைகளையாவது வாசிக்கவேண்டுமென நினைப்பதில்லை. நான் முந்தைய கடிதத்தில் எழுதியதை மீண்டும் உறுதிசெய்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதில்லை. வாசிப்பின்மீது நம்பிக்கையும் இல்லை. ஆனால் நீங்கள் எழுதியதை நான் வாசிகக்வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்.

என்னுடைய இணையதளத்தில் வெளிவந்தக் கட்டுரைகளை வாசித்த அனைவரும் கண்டிப்பாகக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வாசகன் கருத்துத்தெரிவிக்காமலிருப்பதற்கான முழு உரிமை உடையவன்.. அதை இந்த இணையதளத்திலேயே எப்படியும் நூறுமுறை சொல்லியிருப்பேன்,

நான் கருத்துத் தெரிவிக்கவேண்டுமெனச் சொன்னது எழுத ஆசைப்படும் சக படைப்பாளிகள், மற்றும் இலக்கியக்கருத்துக்களைப் பகிர்வதில் ஆர்வம்கொண்டவர்களைப்பற்றி. ஏனென்றல் இலக்கியம் விவாதங்கள் மூலமே நுட்பமாக வாசிக்கப்படும், மதிப்பிடப்படும். விவாதிக்கப்படாத எழுத்து கவனிக்கப்படாது போகும். எங்கும் எப்போதும் அதுவே வழி. நேற்று அந்த மரபு இருந்தது என்று சொல்லியிருந்தேன்.

அதற்கும் நீங்கள் சொல்லியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்? நான் கோத்ரெஜ் சோப்பு போட்டு குளிக்கிறேன். உடனே கோத்ரெஜுக்கு ஃபீட்பேக் கொடுத்தீர்களா என்று கேட்பீர்களா என்ன? ஒருநாளில் நூறு பொருட்களை கையாள்கிறேன், எல்லாவற்றுக்கும் விவாதம் செய்தாகவேண்டுமா என்ன? யோசிக்கிறீர்களா?

நான் கணிப்பொறி நிபுணன் என்றால், இணையதள வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவன் என்றல், இணையதள வடிவமைப்பாளர்கள் சிலருடைய இணையதள வடிவாக்கங்கள் என் முன் வைக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு அந்த ஆக்கங்களை ப்பற்றி என் கருத்தைத் தெரிவிப்பேன். விவாதிப்பேன். என்னை மேம்படுத்திக்கொள்வேன். இணையதளவடிவமைப்பில் மிகமிக நவீனமாக என்னன இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள, என் இடமென்ன என்று நானே வகுத்துக்கொள்ள அது உதவும்

அப்படி என்னைத் தயாரித்துக்கொள்ளாமல் நான் என்குரலை எழுப்ப மாட்டேன்

ஜெ 

ஜெயமோகன் அவர்களுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து.

சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே.

எங்கோ எதையோ தேடி உங்கள் வலையை அடைந்தவர்களில் நானும் ஒருவன். சமீபகாலத்தில் நான் வசித்த வரையில் உங்களுடைய பதிவுகளிலும், பதில்களிலும் பல இடங்களில் யார் மீதாவது நீங்கள் கண்டனத்தையோ, வருத்தத்தையோ பதிவு செய்வதை உணர்கிறேன். உதாரணம், “பதிவிடப்பட்ட சிறுகதைகளுக்கு கருத்து தெரிவிக்கவில்லை”, “சமூகத்தின் பார்வை மாறவில்லை”, இப்படிப் பல. ஆனால் அந்த கண்டனத்தையோ, வருத்தத்தையோ நீங்கள் ஆக்ரோஷமாக வெளியிடுவதில்லை, லாவகமாக வெளியிடுகிறீர்கள். சிறந்த எழுத்தாளர் என்பதால் உங்களிடம் அந்த வல்லமை இருப்பதில் வியப்பில்லை. நீங்கள் செய்யும் செயலை நியாயப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருப்பதாலேயே செய்வதெல்லாம் சரியாகி விடாதல்லவா?

தங்களுடைய தளத்தில் பதிவிட்ட கதைகளுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை பதிவு செய்திருந்தீர்கள். அவன் நான்தான். ஆம், கதைகளைப் படித்தேன், கருத்து தெரிவிக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். எல்லோரிடத்திலும் தாங்கள் செய்த செயலுக்கான‌ விளக்கம் இருக்கின்றதுதான் என்றாலும் என்னிடத்தில் உள்ள இந்த விளக்கம் சற்றே உண்மையாகப்படுவதால் சொல்லுகிறேன்.

நான் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவன்,கற்கின்றவன். நீங்கள் உபயோகிக்கும் இன்றைய தொழில் நுட்பத்தின் பின்னால் என் பங்கும் இருக்கிறது.

கதையைப் படித்து கருத்து தெரிவிக்காதவன் நான் என்பது உண்மை, அதேபோல் மேற்கூறிய செய்தியும் உண்மை. இதில் தங்களிடம் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.

சரி, உங்களிடம் என் கேள்வி இதுதான். உங்களுக்கு Apache Tomcat Server ஐ  Configure செய்யத் தெரியுமா? தவறாகக் கொள்ள வேண்டாம். இனிமேல் வேண்டுமானால் நீங்கள் இணையத்தில் தேடலாம். உங்கள் இணையதளம் இயங்குவது WordPress எனப்படும் Content Management System த்தின் Latest Version என்ன என்பது தாங்கள் அறீவீர்களா? அதற்கு மாற்றாக உள்ள Joomla பற்றி அறிவீரா? அல்லது இதனை உருவாக்கியவருக்கு அல்லது அந்த நிறுவனத்திற்கு உங்கள் கருத்துக்களை அனுப்பியிருக்கீர்களா? இல்லைதானே.

ஆனால் உபயோகப்படுத்துகிறீர்கள். என்றாவது நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு தயாரிப்பினையும் பாராட்டுகிறவர்கள் மட்டும், கருத்து தெரிவிப்பவர்கள் மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் கூறியிருக்கிறோமா? இல்லை. எங்களுடைய புதிய நுட்பங்களினைப் பற்றித் தெரியாதவர்களிடம் கூட அதற்கான முக்கியத்துவத்தை கொண்டுவந்து சேர்க்கிறோம்.

ஏதோ ஒரு விதத்தில் ஒரு தொழில்நுட்பத்தால் சென்றடைய முடிந்ததை தங்களுடைய கதைகளால் அடைய முடியவில்லையென்றால் சொல்லப்பட்ட விதத்திலோ அல்லது கொண்டுவந்து சேர்க்கப்பட்ட விதத்திலோ ஏதோ பிழையென்று தானே பொருள்.

நீங்கள் இவ்வாறு நினைத்துப் பாருங்கள் நாளை முதல் உங்கள் இணைய தளத்தினை திறக்கும் ஒவ்வொருக்கும் இந்தச் செய்தி முதல் செய்தியாகக் காட்டப்படும். “திரு ஜெயமோகன் அவர்கள், நமது புதிய தொழில்நுட்பம் பற்றி கருத்து தெரிவிக்காதனால், அவரிடத்தில் எங்களுடைய வருத்தத்தைப் பதிவு செய்கிறோம், ஜெய‌மோகனின் மனப்பாங்கில் மாற்றம் தேவை”.

இதைத்தானே நீங்கள் செய்திருக்கிறீர்கள். மறைமுகமாகவோ நேரடியாகவோ கருத்து தெரிவிக்காதவர்களைக் குட்டியிருக்கீர்கள் லாவகமாக.தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் எவரும் இலக்கியத்தைப் பற்றி குறைவாகப்பேசி நான் கண்டதில்லை. அதில் புலமை பெறவே விழைகிறோம், அல்லது முயல்கிறோம். ஆனால் நீங்கள் அல்லது பல‌ எழுத்தாளர்கள் நவீன தொழில் நுட்பம் என்ற ஒரே வார்த்தையில் அனைத்தது தொழில் நுட்பங்களையும் அடக்கி விடுகிறீர்களா இல்லையா?

அதனால்தானோ என்னவோ எல்லா இளைஞர்களிடமுமிருந்தும் தங்களுக்கு ஏற்புடைய‌ கருத்துக்களாகத் வருவதில்லையோ என‌வும் தோன்றுகிறது.

உங்களுடைய பல்லாயிரக்கணக்கான‌ வாசகர்கள், நான் உட்பட‌ உங்களை அடைந்தது இணையம் வழியாகத் தானே. அப்புறம் ஏன் அவர்களையே கருத்து தெரிவிக்க வில்லை என் நாகரிகமான‌ வார்த்தைகளால் இகழ்கிறீர்கள்? நீங்கள் உபயோகிக்கும் போன்றவற்றினை உருவாக்கியவருக்கு கருத்து தெரிவித்து விட்டா அதனை உபயோகிக்கிறீர்கள்? உங்களுடைய தேவைக்காக உபயோகிக்கிறீர்கள். அதைப்போலத்தான் நாங்களும், எங்களுடைய இலக்கிய வேட்கையின் பொருட்டு தங்கள் எழுத்துக்களை வாசிக்கிறோம். நாம் இருவருமே ஒன்றுதானே.

விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.

உண்மையுடன்
மகிழ்நன்

முதல்வருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன்.

சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன.

உதாரணமாக IBM போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடக்கூடிய அனைத்து மென்பொருட்களிலும் (Software,Servers, Operating Systems, Middle ware Technologies, VMWare, etc) பன்மொழி அமைப்பு உள்ளது (Multilanguage Support). அதனால் ஆங்கிலம் தெரியாத ஒரு சீனர் அவருடைய தாய்மொழியான சீனத்தில் அந்த தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த மென்பொருளில் சீனமொழியும் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல பல மொழிகளோடு தற்போது மென்பொருட்கள் வெளிவருகின்றன.
Continue reading

சிங்கப்பூரில் ரமலான்

சிங்கப்பூர் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான். வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் மலே இனத்தவரகாவே இருக்கின்றனர். இந்திய முஸ்லீம்களும், சீன முஸ்லீம்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர்.

நம் ஊரைப்போலவே இங்கும் பண்டிகைக்கால சந்தைகள் உண்டு. ஆனால் இங்கு முப்பது நாட்களுக்கு மேலாக சந்தைகளை நடத்துகின்றனர். இந்நாட்டு மக்களின் பழக்க வ‌ழக்கங்களை அறிந்து கொள்வதற்காக‌ சந்தைக்கு நானும் சென்றேன். பல நாட்டு உணவு வகைகள், பானங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள்,மெத்தை விரிப்புகள்,  விளையாட்டுப் பொருட்கள், கேளிக்கை விளையாட்டுக்கள் என பட்டியல் வெகு நீளம்.  இவ்வளவு கடைகள் இருந்தாலும் அந்த மொத்த இடமும் மிக சுத்தமாக இருக்கிறது. நம் ஊர் சந்தைகளைப் போல் இல்லை.

அதுமட்டுமின்றி பல நாட்டு உணவுகளை சுவைப்பதற்கு சரியான இடம். பல வித உணவுகளை கண் முன்னே தயார் செய்து தருகிறார்கள்.